குஜராத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து 88 கிலோ தங்க கட்டிகள், 20 கிலோ நகைகள் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத்தின் அகமதாபாத் நகரில் பூட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கடந்த 17-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் 87.92 கிலோ தங்க கட்டிகள், வைரம் மற்றும் பிற அரிய வகை கற்கள் பதிக்கப்பட்ட 19.66 கிலோ ஆபரணங்கள், 11ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் ரூ.1.37 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டன.
இவற்றில் தங்க கட்டிகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.80 கோடியாகும். பெரும்பாலான தங்க கட்டிகளில் வெளிநாட்டு முத்திரை இருந்தன. எனவே இவை இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை மதிப்பிடும் பணி நடைபெறுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நாட்டில் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு மிகப் பெரிய அடியாக டிஆர்ஐ-டின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
மேலும் பொருளாதார குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதிலும் டிஆர்ஐ-யின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














