பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 8,715 பேர் நாகா துறவிகளாகி விட்டனர். இவர்களில் தலித் மற்றும் பழங்குடிகள் எண்ணிக்கை முதல்முறையாக 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமக் கரையில் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கியது. நாட்டின் 13 அகாடாக்களின் அனைத்து துறவிகளும் இங்கு கூடியிருந்தனர். இவர்களது முகாமின் பல நிகழ்ச்சிகளில் முக்கியமானது புதிய துறவிகளை தங்கள் அகாடா குழுக்களில் சேர்ப்பது ஆகும். இந்தமுறை, 144 வருடங்களுக்கு பிறகு வந்ததாக கருதப்பட்ட மகா கும்பமேளா அதிக முக்கியத்துவம் பெற்றது. இதனால், இதுவரை இல்லாத எண்ணிக்கையில் பல ஆயிரம் ஆண்களும், பெண்களும் துறவறம் ஏற்றுள்ளனர்.
இவர்களில் அதிக எண்ணிக்கையாக நேற்று வரை 8,715 பேர் நாகா துறவிகளாக மாறியுள்ளனர். ஜுனா அகாடாவின் ஒரு குழுவான நாகாக்கள், இந்து மதத்தை காக்கும் போர் வீரர்களாக கருதப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு கும்பமேளாவின் ராஜகுளியல்களில் இவர்களுக்கே முதலிடம் அளிக்கப்படுகிறது. எனவே நாகா துறவிகளாக மாற இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதாக கருதப்படுகிறது இந்த 8,715 பேரில் 250 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் இவர்களில் தலித் மற்றும் பழங்குடியினர் முதல்முறையாக சுமார் 20 சதவீதமாக (1,850 பேர்) உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜுனா அகாடாவின் செய்தித்தொடர்பாளர் சுவாமி ஸ்ரீமஹந்த் நாராயண் கிரி கூறும்போது, “நாட்டில் மதமாற்றத்தை தடுக்க நம்மிடையே சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது அவசியம். தற்போது எங்கள் அகாடா இந்தப் பாதையில் பயணிப்பதால் அதிக எண்ணிக்கையில் துறவிகளும் அவர்களிலும் அதிகமாக தலித் மற்றும் பழங்குடிகளும் இடம்பெற்றுள்ளனர்” என்றார்.
அகில இந்திய அகாடாக்கள் சபையின் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி கூறும்போது, “சனாதனத்தை பரப்புவதற்காக பலரும் துறவறம் ஏற்க தயாராவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது. தலித் சமூகத்தின் கைலாசனாந்த் கிரி, ஜெகத்குரு மகேந்திரானந்த் கிரி ஆகியோருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்கள் தலித் மற்றும் பழங்குடிகள் இடையே துறவு வாழ்க்கையை ஏற்கும் ஆர்வத்தை தூண்டுகிறது” என்றார்.














