விழுப்புரம்: செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமாவதியைத் தேடும் பணி 9-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டும், இதுவரை சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி மாயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமாவதி (7). கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளார்.
மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல்
சிறுமி மாயமாகி 8 நாட்கள் கடந்த நிலையில், இன்று 9-வது நாளாகத் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகளின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து, சிறுமி குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடய அறிவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் தடயவியல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
50 டிரோன்கள் மூலம் தேடுதல்
சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் மற்றும் மலைக்குன்றுகளில் உள்ள குகைகள், பாறை இடுக்குகள் உள்ளிட்ட பகுதிகளில் 50 டிரோன்கள் மூலம் தேடுதல் நடைபெற்று வருகிறது.
ஆலம்பூண்டி மலையில் 20 போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் தேடி வருகின்றனர். தீயணைப்புத் துறையினரும் ஆலம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆழமான பெரிய கிணறுகளில் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியும் தேடப்பட்டு வருகிறது.
செல்போன் அழைப்புகள், சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள 3 செல்போன் கோபுரங்களுடன் தொடர்புடைய சுமார் 600 அழைப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஆலம்பூண்டி சிவன் கோவிலில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியாரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிறுமியின் கதி என்ன?
பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமி ஹேமாவதி குறித்து இதுவரை உறுதியான தகவலோ, முக்கிய தடயமோ கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி மாயமாகி 9 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாததால் பெற்றோரும் உறவினர்களும் கவலையில் உள்ளனர். சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
