கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ வால்பாறை ஸ்ரீதரன், பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் டி.செல்வம், ஜி.எஸ்.மணி, கே.பாலு ஆகியோர் தங்களது வாதத்தில் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அதிகரித்து வருவதாக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏற்கெனவே சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொதுமக்களும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையின்றி விஷச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. இவ்வாறு அவர்கள் வாதிட்டிருந்தனர்.
அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீ்ந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, தெரிவித்ததாவது: சம்பவத்துக்கு காரணமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாமல் தடுக்கும் நோக்கில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: உள்ளூர் போலீஸாருக்கே தெரியாமல் விஷச்சாராயம் உயிரிழப்புகள் நடந்துள்ளது என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. தமிழக போலீஸார் கண்டும் காணாமல் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. காவல் துறை உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றதும் தவறான நடவடிக்கை. எனவே, இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் விளக்கம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன் என்பது குறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: காவல் நிலையத்தில் இருந்து கல்லெறியும் தூரத்தில் நடந்த விஷச்சாராய விற்பனையை போலீஸார் எப்படி கவனிக்காமல் இருந்தனர் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட எஸ்.பி. அடுத்த மாதமே தாம்பரத்துக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இது கண்துடைப்பு நடவடிக்கையாக பார்க்க முடிகிறது. தவறு இழைத்த அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரே விசாரித்தால் நியாயமாக இருக்காது.
முக்கிய குற்றவாளியான சாராய வியாபாரி கன்னுக்குட்டி மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 9 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தடையின்றி விஷச்சாராயம் காய்ச்சி விற்கிறார் என்றால் அவருக்கும், காவல் துறைக்குமான தொடர்பு என்ன என்பது நன்றாக புலப்படுகிறது. இந்த சம்பவத்தில் வெளிமாநிலங்களுக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளோம். இந்த வழக்கில் மாநில அரசு அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவர்கள் தங்கள் மீதான வழக்குக்கு தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.