
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் 6 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி என மொத்தம் 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதன் விவரம்:
சென்னை பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக, சுமார் 4.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.23.65 கோடி மதிப்பீட்டில் அழகிய இயற்கை எழிலுடன் கூடிய சுற்றுச்சூழல் குளம், பறவை கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் ரூ.20.61 கோடி மதிப்பீட்டில் அழகிய பூங்கா, பூங்காவில் செயல்திறன் பகுதி, பருவகாலத் தோட்டம், மழைத் தோட்டம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.







