இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது. இந்திய அணியின் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் குறைந்த ரன்களில் இந்த போட்டியில் அவுட்டானதுதான் தோல்விக்குக் காரணம். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும் வெற்றியை எட்ட முடியவில்லை.
எனவே, இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா, சூர்யகுமார், பாண்டியா, சஞ்சு சாம்சன், துபே ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம். அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்கும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசி வருகின்றனர்.
அவரது விக்கெட்டை வீழ்த்தும்போது இந்திய அணியின் உத்வேகத்தைக் குறைக்கலாம் என அவர்கள் எண்ணுகின்றனர். எனவே, இன்றைய ஆட்டத்திலும் அபிஷேக் சர்மாவைக் கட்டுப்படுத்த நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் வியூகம் வகுக்கக்கூடும்.
பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த போட்டியில் ஹர்ஷித் ராணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். கடைசி ஆட்டத்தில் இவர்களது பந்துவீச்சு எதிரணிக்கு நிச்சயம் அழுத்தத்தைக் கொடுக்கும்.
கடந்த ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி களமிறங்கவில்லை. எனவே, இன்றைய ஆட்டத்தில் வருணுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. அதேநேரத்தில் 4-வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே கடந்த ஆட்டத்தில் 44 ரன்களும், டிம் செய்பர்ட் 62 ரன்களும் குவித்தனர். கடைசி நேரத்தில் டேரில் மிட்செல் 39 ரன்களை விளாசினார்.
எனவே, கடைசி ஆட்டத்தில் இவர்களிடமிருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃப்பி, ஜகாரி போக்ஸ், இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி இந்திய அணியின் விக்கெட்களைச் சாய்த்தனர்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இவர்கள் சிறப்பான வகையில் பந்துவீசி நெருக்கடியைக் கொடுப்பர் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளதால், எந்தவித நெருக்கடியும் இன்றி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரம்: இரவு 7
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஜியோஸ்டார் செயலி



