தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு ரூ.40 லட்சத்துக்கான நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் எஸ்.சின்னதம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை ஜி.எஸ்.மணி, ஏ.என்.பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி (எ) ஜி.எம்.சித்திரைசெல்வி, வி.நாகு, பி.சீதாலட்சுமி, ஆர்.எஸ்.ஜெயலதா, எஸ்.ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
அதேபோல், தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க சண்முக செல்வகணபதி, ப.ரங்கராஜ், வளப்பக்குடி வீரசங்கர், இரா.சீனிவாசன், செ.நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவிக்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
இதுதவிர, தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு தலா ரூ.1.50 லட்சத்துக்கான ஆணைகளையும் வழங்கினார்.
மேலும், மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்புக்காக தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 மரபுரிமையினருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலைகளையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச்செயலர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.