‘டீசல்’ படத்துக்காக கடலுக்குள் 40 நாள் ஷூட்டிங்!

0
14

ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசை அமைத்திருக்கிறார். தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறியதாவது: நமது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதோடு சென்றுவிடுகிறோம். அதற்குப் பின்னால் சில அதிர்ச்சியான சம்பவங்கள் கிடைத்தன. அது பெரிய உலகமாக இருந்தது. அது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்ததால் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். படம் பார்க்கும்போது, நூறு ரூபாய் கொடுத்து பெட்ரோல் போடுவதற்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று யோசிக்க வைக்கும். இந்த ஸ்கிரிப்ட்டுக்காக ஏழு வருடம் ஆய்வு செய்திருக்கிறேன்.

பெட்ரோல், டீசல் திருடுவதைப் பற்றி செய்திகளாகக் கேள்விப்பட்டிருப்போம். அதில் சொல்வதற்குப் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. நான் ஒரு பகுதியை மட்டுமே தொட்டிருக்கிறேன். அது சர்வதேச அளவில் தொடர்புப்படுத்தக் கூடிய விஷயம். 2014-ம் ஆண்டுக்குள் நடக்கும் ஆக்‌ஷன் கதை இது. ஹரீஷ் கல்யாண் மீனவராக நடித்திருக்கிறார். அதுல்யா ரவி, வழக்கறிஞராக வருகிறார். கதைக்குத் திருப்புமுனையான கதாபாத்திரம் அவருக்கு. பழவேற்காட்டில் சில காட்சிகளுக்குப் பிரம்மாண்ட செட் அமைத்தோம். கடலுக்குள் மட்டும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.இவ்வாறு சண்முகம் முத்துசாமி கூறினார். ஹரிஷ் கல்யாண் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here