டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆதிஷி, சீக்கியர்கள் வணங்கும் குரு தேஜ் பகதூர் குறித்து அவதூறான கருத்துகளை கூறியதாக ஆளும் பாஜக.வினர் குற்றம் சாட்டினர்.
அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக.வினர் குரல் எழுப்பினர். இதையடுத்து ஆதிஷியின் பேச்சுகள் அடங்கிய வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப சபாநாயகர் விஜயேந்திர குப்தா உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலை பேரவை கூடியது. அப்போது ஆத் ஆத்மி எம்எல்ஏ.க்கள் அவை நடுவில் வந்து, “ஆதிஷியின் பேச்சுகள் அடங்கிய வீடியோவை பாஜக.வினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இந்த விவகாரத்தை தடயவியல் ஆய்வுக்கு சபாநாயகர் அனுப்பி உள்ளார். அதனால், வீடியோவை வெளியிடக் கூடாது என்று பாஜக.வினருக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
அதற்கு பாஜக எம்எல்ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆம் ஆத்மிஎம்எல்ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் சோம் தத், ஜர்நெய்ல் சிங், சஞ்சீவ் ஜா, குல்தீப் குமார் ஆகிய 4 பேரையும் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



