சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.
கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போதைய டெல்லி அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி சில மாதங்களுக்கு முன்பு 19 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.
அப்போது முதல்வர் ரேகா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் சீக்கியர் கலவரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கலவரம் தொடர்பான வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெல்லியில் ஆளும் பாஜக அரசு, சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் ரேகா தெரிவித்தார்.







