அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

0
325

மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நாட்டுக்கே வழிகாட்டும் வகையில், மக்கள் நலன் கருதி பல முன்னோடி நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இப்பணியில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையே, மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி சமீபத்தில் 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின், இதை கனிவுடன் பரிசீலித்து, மாநில அரசு பணியாளர்களுக்கும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால், 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜூலை 1 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள முதல்வருக்கு பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here