தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சனத் நகரில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வந்தனர்.
நேற்றும் வழக்கம்போல் மேற்கூரையில் பராமரிப்புப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கீழ் தளத்தில் பணி செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்பதற்குள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக சனத் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









