பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் 3 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு பாஜக.,வின் அச்சுறுத்தல் காரணம் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் சட்டப் பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் 3 வேட்பாளர்கள் முதுர் ஷா, சத்ய பிரகாஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகியோர் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளனர். இதுகுறித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
தேர்தலில் யார் வென்றாலும் கவலையில்லை. நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்ற பிம்பத்தை பாஜக கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. ஆனால், புதிய கட்சியான ஜன் சுராஜ் கட்சியை கண்டு தே.ஜ. கூட்டணி பயப்படுகிறது.
ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வற்புறுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக பாஜக, ‘‘எங்களுக்கு ஓட்டு போடுங்கள், இல்லையென்றால் லாலுவின் காட்டாட்சி மீண்டும் திரும்பிவிடும் என மக்களை பாஜக வழக்கமாக அச்சுறுத்தும். ஆனால் இந்த முறை ஜன் சுராஜ் என்ற புதிய கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் கட்சியின் தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவுக்கு அழுத்தம் கொடுத்து மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக பாஜக.,வுக்கு வாக்களிக்க கூடாது என தனாபூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
முதுர் ஷாவை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் கடத்தியதாக பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால், அவர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் உள்ள போட்டோ வெளிவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். எத்தனை வேட்பாளர்களை பாஜக இழுத்தாலும், நாங்கள் இந்த தேர்தலில் கடுமையாக போராடுவோம். பிஹாரில் மாற்றம் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.