இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. சுமார் 36 வகையான புற்றுநோய்கள் காணப்படுகின்றன. உலகில் அதிக புற்றுநோயாளிகள் வாழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா 2-ம் இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.
இதை தடுக்க முன்கூட்டியே பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். வாய், கருப்பை, நுரையீல் புற்றுநோயாலும் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்திய புற்றுநோயாளிகளில் 50 சதவீதம் பேர் 50 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவ்வாறு ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.














