முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முல்தானில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 7, கேப்டன் ஷான் மசூத் 3, சவுத் ஷகீல் 4 ரன்களில் நடையை கட்டினர். அறிமுக வீரரான கம்ரன் குலாம் 118, சைம் அயூப் 77 ரன்கள் சேர்த்தனர்.
முகமது ரிஸ்வான் 37, சல்மான் ஆகா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 123.3 ஓவர்களில் 366 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் 41 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா 31, அமீர் ஜமால் 37, சஜித் கான் 2, நோமன் அலி 32 ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் 4, பிரைடன் கார்ஸ் 3, மேத்யூபாட்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 27 ரன்கள் எடுத்த நிலையில் நோமன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆலி போப் 29, ஜோ ரூட் 34, ஹாரி புரூக் 9 ரன்களில் சஜித் கான் பந்தில் வெளியேறினர். சீரான இடைவேளையில் விக்கெட்கள் சரிந்த போதிலும் அதிரடியாக விளையாடி தனது 4-வது சதத்தை விளாசிய பென் டக்கெட் 129 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் சஜித் கான் பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற சல்மான் ஆகாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில் நோமன் அலி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜேமி ஸ்மித் 12, பிரைடன் கார்ஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 4 விக்கெட்களையும், நோமன் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இங்கிலாந்து அணி.