முல்தான்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.
முல்தானில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 114 ரன்கள் விளாசினார். ஸாக் கிராவ்லி 27, ஆலி போப் 29, ஜோ ரூட் 34, ஹாரி புரூக் 9, பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் வெளியேறினர்.
ஜேமி ஸ்மித் 12, பிரைடன் கார்ஸ்2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 67.2 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேமி ஸ்மித் 21, பிரைடன் கார்ஸ் 4, மேத்யூ பாட்ஸ் 6, ஷோயிப் பஷிர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜேக் லீச் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்களையும், நோமன் அலி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணியானது 59.2 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சல்மான் ஆகா 63, சவுத் ஷகீல் 31, கமரன் குலாம் 26, முகமது ரிஸ்வான் 23, சஜித் கான் 22 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஷோயிப் பஷிர் 4, ஜேக் லீச் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 297 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 0, ஸாக் கிராவ்லி 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 261 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது இங்கிலாந்து அணி.