கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

0
248

எல்லை தாண்டி வந்ததாக குற்றம்சாட்டி, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, அந்த படகுகளில் இருந்த 23 மீனவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து, தாயகம் திரும்ப அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை (நவ.12) பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடத்துவதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 65 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், 485 மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here