தமிழக மாணவர்களுக்கு வரவேண்டிய ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு அளிப்பதா? – மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

0
164

தமிழக மாணவர்களுக்கு உரிய ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகத்துக்கு எதிரான மத்திய பாஜக அரசின் விரோத மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போகிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழி கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழக மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடியை பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்காக போராடும் மாணவர்களை தண்டிக்கும் நோக்கில் இத்தகைய செயலை செய்கின்றனர்.

இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாக பழிவாங்க, மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படுத்தும் அளவுக்கு வேறு எந்த அரசும் இரக்கமின்றி நடந்தது இல்லை. தமிழகம், தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பாஜக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட பதிவில், ‘தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பிஎம்ஸ்ரீ (PMShri) திட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. அத்திட்டத்தில் இணைந்தால், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால், முதல்வர் வழிகாட்டுதலின்படி நாம் உறுதியுடன் மறுத்து வருகிறோம். இதனால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.2,152 கோடியை, பாஜக ஆளும் குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது. இவ்வாறு வஞ்சக மனப்பான்மையோடு செயல்படும் மத்திய அரசை தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் மன்னிக்க மாட்டார்கள். மாநில உரிமையை பெற தொடர்ந்து போராடுவோம். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here