2025-ம் ஆண்டில் ஆண்டவரின் ஆசீர்வாதமும், வல்லமையும் கிடைக்கும்: பால் தினகரன் கருத்து

0
173

2025-ம் ஆண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று பால் தினகரன் தெரிவித்தார். இயேசு அழைக்கிறார் நிறுவனம் சார்பில் புத்தாண்டு ஆசீர்வாதக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இயேசு அழைக்கிறார் அமைப்பின் நிறுவனர் பால் தினகரன் தலைமை வகித்தார். அவரது குடும்பத்தினர் சாமுவேல் பால் தினகரன், ஸ்டெல்லா ரமோலா, டேனியல் டேவிட்சன் மற்றும் பேபி கேட்லின் ஆகியோர் கிறிஸ்துவப் பாடல்களை பாடி, கூட்டத்துக்கு வருகை தந்த ஏராளமான மக்களை உற்சாகமூட்டினர்.

தொடர்ந்து, இயேசு அழைக்கிறார் குடும்பத்தினர், பேராயர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இணைந்து 25 அடி நீள கேக் வெட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், கூட்டத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

அமைப்பின் நிறுவனர் பால் தினகரன் மக்களுக்காக சிறப்பு பிராத்தனை செய்தார். அவர் பேசும்போது, “இயேசு கிறிஸ்து 2025-ம் ஆண்டை தேசத்துக்கு ஆசீர்வாதமாக கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டில் தேசத்துக்கும், அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் ஆசீர்வாதமும், வல்லமையும் கிடைக்கும்.

இறைவனைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுள் இளைபாறுதலைக் கொடுத்து, அவர்கள் இழந்த எல்லாவற்றையும் இந்த ஆண்டில் இரண்டு மடங்காகத் திரும்பத் தருவார். மக்கள் அனைவரும் சமாதானத்தோடு இருப்பீர்கள். நாம் ஆண்டவரின் ஊழியர்களாக, சந்தோஷமாக, 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” என்றார்.

தொடர்ந்து, சாமுவேல் பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன் ஆகியோரும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில், ஸ்டெல்லா தினகரன், ஷில்பா தினகரன், போதகர் டி.மோகன் மற்றும் பேராயர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here