Home விளையாட்டு செய்திகள் 21 சிக்சர்களுடன் 202 நாட் அவுட்: நியூஸி. வீரர் பெவன் ஜேக்கப்ஸ் அதிரடி தர்பார்!

21 சிக்சர்களுடன் 202 நாட் அவுட்: நியூஸி. வீரர் பெவன் ஜேக்கப்ஸ் அதிரடி தர்பார்!

0

ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஃபோர்ட் டிராபிக்கான ஒரு நாள் போட்டியில் ஆக்லாந்து ஏசஸ் அணிக்கு ஆடும் பெவன் ஜேக்கப்ஸ், ஒடாகோ அணிக்கு எதிராக 137 பந்துகளில் 202 ரன்களை 21 சிக்சர்களுடன் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஆனால், இந்த காட்டடி இன்னிங்ஸ் விரயமானது வேறு கதை. இவரது இரட்டைச் சதத்துடன் ஆக்லாந்து ஏசஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய ஒடாகோ அணி 49.1 ஓவர்களில் 338/5 என்று அபார வெற்றி பெற்றது.

பெவன் ஜேக்கப்சின் சாதனை இரட்டைச் சதம் வெற்றியைப் பெற்றுத் தராதது ஆக்லாந்து அணிக்கு ஏமாற்றமே. ஒடாகோ அணியில் ஒரு வீரர் கூட சதமெடுக்கவில்லை, ஆனால் ஜேக் பாய்ல் (62), தார்ன் பார்க்ஸ் (55), விக்கெட் கீப்பர் மாக்ஸ் சூ (75) ஆகியோரது அதிரடி அரைசதங்களே இலக்கை அடைய போதுமானதாக அமைந்து போனது.

இந்திய ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பேவன் ஜேக்கப்ஸ். ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 2024-ஆம் ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாவதற்கு முன்பே அவரை ஒப்பந்தம் செய்தது. இருப்பினும், 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த அணி அவரை விடுவித்தது.

இந்நிலையில், நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டியில் நான்காவது வீரராகக் களமிறங்கிய ஜேக்கப்ஸ், ஓடாகோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். தனது முதல் லிஸ்ட் ஏ சதத்தையே இரட்டைச் சதமாக மாற்றி அசத்தினார். அவரது அதிரடி ஆட்டத்தில் 21 சிக்ஸர்கள் அடங்கின. இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

உலக சாதனையைச் சமன் செய்ய அவருக்கு இன்னும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆஸ்திரேலியாவின் டார்’சி ஷார்ட், 2018-ஆம் ஆண்டு சிட்னியில் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிராக மேற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியபோது 148 பந்துகளில் 257 ரன்கள் குவித்து 23 சிக்ஸர்கள் அடித்ததே உலக சாதனையாக உள்ளது.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த நான்காவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஜேக்கப்ஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஜேமி ஹவ் (2012), மார்ட்டின் கப்தில் (2015), சாட் போவ்ஸ் (2024) ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

இதுவரை 33 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜேக்கப்ஸ், அதிரடி பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறார். 2024ஆம் ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர், இதுவரை 16 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் இன்னும் அறிமுகமாகவில்லை.

தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் பிறந்த ஜேக்கப்ஸ், தனது மூன்று வயதில் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.

2023-24ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரில் தனது திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கேன்டர்பரி கிங்ஸ் அணிக்காக ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி 188.73 ஸ்டிரைக் ரேட்டில் 134 ரன்கள் எடுத்திருந்தார். குறைந்தது 50 பந்துகளை எதிர்கொண்ட வீரர்களில் டக் பிரேஸ்வெல் (202.02) மட்டுமே இவரைவிட அதிக ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளவர் ஆவார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version