எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது அருண் குமார் திவாரி, சந்தீப் அரே என்ற 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். உலகின் மிக உயரமான எவ ரெட்ஸ் சிகரத்தை சந்தீப் அரே புதன்கிழமையும் அருண் குமார் திவாரி வியாழக்கிழமை மாலையும் அடைந்துள்ளனர்.
பின்னர் கீழே இறங்கும்போது 4 ஷெர்பா வழிகாட்டிகளின் உதவியுடன் வந்து கொண்டிருந்த திவாரி ‘ஹிலாரி ஸ்டெப்’ பகுதிக்கு அருகே உயிரிழந்தார். சந்தீப் அரே உடல்நலக் குறைவுக்கு பிறகு ஷெர்பா மீட்புக் குழுவினரால் கீழே கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
21 வயதான சானிகா ஷா மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையின் அனைத்து பெண் மலையேற்றக் குழுவினர் உள்ளிட்ட பல இந்தியர்கள் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த நிலையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த ஆண்டு மலையேற்றப் பருவம் தொடங்கிய பிறகு நேபாளத்தின் தெற்கு அடிவார முகாமில் இருந்து சாதனை அளவாக 274 மலையேற்ற வீரர்கள் புதன்கிழமை ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அதிகாரி கள் 493 அனுமதிகளை வழங்கி யுள்ள நிலையில் இது சாதனை ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1953-ல் டென்சிங் நார்கே, சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்ததிலிருந்து, ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச அனுமதி இதுவாகும்.
