அபுதாபி: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 139 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.
அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 102 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 86 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 79 ரன்களும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அடேர் 4 விக்கெட்களையும், கிரெய்க் யங் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
272 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணி 31.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் டாக்ரெல் 21, பில்பிரின் 20, கர்திஸ் கேம்பர் 20 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லிஸாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். லுங்கி நிகிடி, ஜோர்ன் ஃபோர்டுயின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.