நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

0
181

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிஹார் மாநிலம் பாகல்பூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதிநிலையை தொடர்ந்து பலப்படுத்தும். இந்த திட்டம் தொடங்கியது முதல் இதுவரை ரூ.3.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here