ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், புதால் கிராமத்தில் கடந்த டிசம்பர் 7 முதல் ஜனவரி 19 வரை மர்ம நோய் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று கூறுகையில், “17 பேர் மர்ம மரணம் தொடர்பான விசாரணை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஜவுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் சுமார் 250 கடைகள் மூடப்பட்டுள்ளன. ரஜவுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் முற்றிலும் குணம் அடைந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர் குழுவினர் ரஜவுரி மாவட்டத்தில் 3 நாள் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவினர் தங்கள் பயணத்தில் புதால் கிராம நோயாளிகளை பரிசோதனை செய்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை ஆய்வு செய்தனர்.
ரஜவுரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஏ.எஸ்.பாட்டியா கூறுகையில், “மர்ம நோய் அறிகுறிகளுடன் இங்கு வந்த 11 நோயாளிகளுக்கும் அட்ரோபின் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அனைவரும் உயிர் பிழைத்தனர். அட்ரோபின் என்பது ஆர்கனோபாஸ்பரஸ் குழு விஷங்களுக்கு ஒரு மாற்று மருந்தாகும். எனவே 17 பேர் இந்த விஷத்தால் இறந்ததாக நம்பலாம்” என்றார்.














