வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை, நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழுதினார். “பாரத அன்னையே நான் உனக்கு தலைவணங்குகிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வந்தே மாதரம் பாடல் மிகப்பெரிய உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வந்தே மாதரம் தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இதையொட்டி மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது வந்தே மாதரம் பாடலின் நினைவாக அஞ்சல் தலை, நாணயத்தை அவர் வெளியிட்டார். மேலும் பாடலின் ஓராண்டு கொண்டாட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதன்படி அடுத்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இன்றைய தினம் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறோம். இது வரலாற்று சிறப்புமிக்க தினம். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை கிடையாது. இது ஒரு மந்திரம், ஒரு சக்தி, ஒரு கனவு, ஒரு தீர்மானம். பாரத அன்னை மீதான பக்தியை பாடல் வெளிப்படுத்துகிறது. இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பாடல் உணர்த்துகிறது.
கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்தமடம் நாவலில் வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றது. இந்த நாவல் குறித்து கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூறும்போது “ஆனந்தமடம் என்பது வெறும் நாவல் கிடையாது. அது சுதந்திர இந்தியாவின் கனவு” என்று தெரிவித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டபோது, அவர்களின் ஒரே மந்திரமாக வந்தே மாதரம் இருந்தது. வீர் சாவர்க்கர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்களை சந்திக்கும் போதெல்லாம் வந்தே மாதரம் என்றே வாழ்த்தினர். பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கு மேடையில் நின்று கொண்டு வந்தே மாதரம் பாடலை பாடினர்.
கடந்த 1927-ம் ஆண்டில் மகாத்மா காந்தி கூறும்போது, “வந்தே மாதரம் முழு இந்தியாவை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார். அரவிந்தர் உட்பட பல்வேறு தலைவர்கள் இந்த பாடலுக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற வேண்டும். இதற்காக சுயசார்பு இந்தியா திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். அந்த லட்சிய இலக்கை நோக்கி நாம் அதிவேகமாக முன்னேறி வருகிறோம்.
நமது ராணுவம், எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடிக்கும்போதும், தீவிரவாதத்தை முறியடிக்கும்போதும், நமது வீரர்களின் ஒரே மந்திரமாக வந்தே மாதரம் விளங்குகிறது. இந்த பாடல் இந்தியாவை ஒன்றிணைக்கிறது. நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பாடலின் முக்கிய வரிகள் நீக்கம் – டெல்லி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அறிவை அளிப்பவள் சரஸ்வதி, செல்வத்தை அளிப்பவள் லட்சுமி, ஆயுதங்கள், வேதங்களை ஏந்திய துர்க்கை என்று வந்தே மாதரம் பாடலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த 1937-ம் ஆண்டில் வந்தே மாதரம் பாடலின் முக்கியமான வரிகள் (சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை சார்ந்த வசனங்கள்) நீக்கப்பட்டன. அப்போதே தேசப் பிரிவினைக்கான விதைகள் விதைக்கப்பட்டன. ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது? இன்றளவும் பிரிவினைவாதம் தேசத்தின் நலனுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. இளம் தலைமுறை இதை புரிந்துகொள்வது மிகவும் அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.














