கும்பமேளாவில் ஒரே நேரத்தில் 15,000 பேர் தூய்மைப் பணி: புதிய கின்னஸ் சாதனை

0
288

மகா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு புதிய கின்னஸ் சாதனை படைத்து உள்ளனர்.

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் மகா கும்ப நகர் என்ற பிரம்மாண்ட நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நேரத்தில் ஒரு கோடி பேர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

1.5 லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நாள்தோறும் 650 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திரிவேணி சங்கம் பகுதியில் பக்தர்கள் புனித நீராட சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு படித்துறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நதி நீரை தூய்மைப்படுத்த 3 சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.

கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற கும்பமேளாவின்போது ஒரே நேரத்தில் 10,000 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். இதை முறியடிக்கும் வகையில் தற்போதைய மகா கும்பமேளாவில் நேற்று முன்தினம் தூய்மை மகா கும்பமேளா நடைபெற்றது.

அப்போது ஒரே நேரத்தில் சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மகா கும்ப நகரின் 4 மண்டலங்களிலும் தூய்மைப் பணி நடைபெற்றது.

லண்டனில் உள்ள கின்னஸ் சாதனை தலைமை அலுவலகத்தில் இருந்து ரிஷி நாத், பிரயாக்ராஜுக்கு நேரில் வருகை தந்து கின்னஸ் சாதனை முயற்சியை பார்வையிட்டார். தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அவர் கணக்கிட்டு, அவர்களின் தூய்மை பணியை ஆய்வு செய்தார். இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை அவர் வழங்கினார்.

பிரயாக்ராஜ் நகர மேயர் ஞானேஷ் கேசர்வாணி, மகா கும்பமேளா சிறப்பு அதிகாரி ஆகான்ஷா ராணா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here