மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள பான்பூர் எல்லைப் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் 32-வது பட்டாலியன் வீரர்கள் தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரக் கண்காணிப்புக்குப் பிறகு, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த பெண் ஒருவரைப் பிடித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து 15 கிலோ 607 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.24 கோடியே 95 லட்சத்து 56 ஆயிரம் ஆகும். எல்லைப் பகுதியில் அண்மைக்காலத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தங்கக் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இந்தத் தங்கம் எல்லைப் பகுதிக்கு எப்படிக் கொண்டு வரப்பட்டது, இதை யாருக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து பிடிபட்ட பெண்ணிடம் பிஎஸ்எப் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
