காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக 50 சுற்றுலா தலங்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மூடியது.
இந்நிலையில் விரிவான பாதுகாப்பு மறுஆய்வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்றுலாத் தலங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஸ்ரீநகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மனோஜ் சின்ஹா வெளியிட்ட பதிவில், “முழுமையான பாதுகாப்பு மறுஆய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கூடுதல் சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
காஷ்மீர் பிராந்தியத்தில் அருபள்ளத்தாக்கு, ராஃப்டிங் முனையன்னர், அக்காட் பூங்கா, பத்ஷாஹி பூங்கா, கமான் போஸ்ட் உள்ளிட்ட ஏழு சுற்றுலா தலங்களும், ஜம்மு பிராந்தியத்தில் ராம்பனில் உள்ள டாகன் டாப், கதுவாவில் உள்ள தாகர், சலாலில் உள்ள சிவ குகை உள்ளிட்ட 5 சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்படும்” என்று கூறியிருந்தார். கடந்த ஜூன் மாதம் காஷ்மீரில் 8 சுற்றுலா தலங்களை திறக்க சின்ஹா உத்தரவிட்டார்.