Home உலக செய்திகள் சீனாவில் ஆதரவற்ற இளைஞரின் திருமண விழாவில் விலை உயர்ந்த பரிசுகளுடன் குவிந்த 10 ஆயிரம் பேர்

சீனாவில் ஆதரவற்ற இளைஞரின் திருமண விழாவில் விலை உயர்ந்த பரிசுகளுடன் குவிந்த 10 ஆயிரம் பேர்

0

சீனாவின் யுன்னான் மாகாணம், யிலியாங் மாவட்டம், யுன்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜியாவோ ஸு (24). இவர் 3 வயதில் தந்தையை இழந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாய் மறுமணம் செய்து தனியாக சென்றுவிட்டார். சிறுவன் ஜியாவோ ஸு பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

7 வயதில் பாட்டியும் உயிரிழந்தார். தூரத்து உறவினர்களின் உதவியால் வளர்ந்த அவரால், வறுமை காரணமாக தொடக்கப் பள்ளி கல்வியைக்கூட நிறைவு செய்ய முடியவில்லை.

சிறுவயதிலேயே வாழ்வாதாரத்துக்காக கூலி வேலைக்குச் சென்றார். கட்டுமானப் பணி, ஓட்டுநர் என பல்வேறு வேலைகளை செய்து சிறுக, சிறுக பணம் சேர்த்தார். ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவு செய்தார். தற்போது 24 வயதாகும் அவரிடம் சுமார் ரூ.23 லட்சம் சேமிப்பு உள்ளது.

தாய், தந்தை, உறவினர்கள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உள்ள அவர் அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் “எனக்கு யாருமே இல்லை. தாய், தந்தை, உறவினர்கள் இன்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். கிடைத்த கூலி வேலைகளை செய்து ஓரளவுக்கு பணம் சேர்த்து உள்ளேன். அக்டோபர் 31-ம் தேதி எனக்கு திருமணம். சொந்தம், பந்தம் இல்லாத என்னுடைய திருமணத்தில் உள்ளூர், வெளியூர் மக்கள் பங்கேற்க வேண்டுகிறேன்” என்று கண்ணீர் மல்க அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீனாவின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர், ஜியாவோ ஸுயின் திருமணத்தில் பங்கேற்க யுன்பெங் கிராமத்தில் குவிந்தனர். ஒவ்வொருவரும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி வந்தனர். சிலர் திருமண விழா விருந்துக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வந்தனர்.

வேறு சிலர் அசைவ உணவு வகைகளுக்காக ஆடு, மாடு, பன்றிகளை வாகனங்களில் கொண்டு வந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் இலவசமாக ருசியான உணவு வகைகளை சமைத்து கொடுத்தனர். திருமண விழா ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான ஆடம்பர கார்கள் வரிசையாக அணிவகுத்தன. ஆடல், பாடல், கொண்டாட்டத்துடன் ஜியாவோ ஸுயின் திருமணம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த கிராமமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றை நனவாக்கும் வகையில் ஆதரவற்ற சீன இளைஞரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version