கிராமப்புறத்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் கொண்டு வரப்பட்டது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம். இதன் மூலம் கிராமப்புறத்து மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது உறுதிசெய்யப்படுகிறது.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.319 ஊதியம் வழங்கப்படுவதாக கணக்குகள் சொன்னாலும், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக ரூ.270 மட்டுமே பயனாளிகளின் கைக்குப் போய்ச் சேர்வதாகச் சொல்கிறார்கள். இதுவுமில்லாமல் சில இடங்களில் போலியான ஆட்கள் மூலம் வருகைப் பதிவுகளை ஏற்படுத்தி மொத்தப் பணத்தையும் ஸ்வாகா செய்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய மோசடிகள் எல்லாம் நடந்து விடக் கூடாது என்பதற்காகவே செயலிகள் மூலம் பயனாளிகளின் தினசரி வருகையானது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பயனாளிகள் தங்கள் செயல்பாடுகளை காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், அவர்கள் பற்றிய விவரங்களை மதியம் 2 மணிக்கும் செயலி வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், பயனாளிகளின் வருகைப் பதிவேடுகளையும் அவர்களின் ஆதார் எண், புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும். இப்படியெல்லாம் கடிவாளம் போட்டாலும் அதிலும் சில அதிகாரிகள் புகுந்து விளையாடுவதாகச் சொல்கிறார் கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் பி.காந்தி.
“100 நாள் வேலைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடப்பாரை, மண்வெட்டி, பாண்டு சகிதம் போய் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்துவிட்டு பெயரளவுக்கு ஏதோ மண்ணைக் கொத்திவிட்டு மதியம் வீடு திரும்புகின்றனர். இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் ஊராட்சிப் பணியாளர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இஷ்டத்துக்கு ஊழல் செய்து பணத்தைச் சுரண்டுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து இங்குள்ள ஓர் ஊராட்சியில் 100 நாள் வேலையில் இருப்பவர்கள் 20 பேர் தான். ஆனால், 80 பேர் வேலை செய்வதாக கணக்கெழுதுகிறார்கள். மீதி 60 பேருக்கு வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்குகிறார்கள். அந்த 60 பேருக்கும் கையெழுத்துப் போட்டு விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்வதற்காகவே ஒருவருக்கு 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்கியிருப்பது தான் பெரும் கூத்து” என்கிறார் பி.காந்தி.
இதுபற்றி மேலும் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்ட உளுந்தூர்பேட்டை பிடாகம் ஊராட்சியைச் சேர்ந்த ஆறுமுகம். “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் ஊராட்சி செயலருக்கு 20 அட்டை, தலைவருக்கு 20 அட்டை, மக்கள் நலப்பணியாளருக்கு 10 அட்டை என 100 நாள் வேலை திட்டத்துக்கான அடையாள அட்டைகளை ஒதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த 50 அட்டைகளுக்கும் அவர்களே வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்துவிடுகிறார்கள்.
இந்த 50 அட்டைகளுக்கான சொந்தக்காரர்கள் வேறு எங்காவது வேலையில் இருப்பார்கள். இவர்களது ஏடிஎம் கார்டுகள் மக்கள் நலப் பணியாளரிடமும், ஊராட்சி செயலரிடமும் இருக்கும். இந்தப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவாகும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை ஊராட்சி செயலரும், மக்கள் நலப் பணியாளரும் எடுத்துக்கொண்டு மீதியைத்தான் பயனாளிகளுக்கு கொடுப்பார்கள். இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பங்கும் போகும். வேலையே செய்யாமல் வரும் பணம் என்பதால் பயனாளிகளும் வந்தவரை லாபம் என விட்டுவிடுகிறார்கள்.
திட்டத்தின் உண்மையான பயனாளிகளுக்கு 4 மாதங்கள் கூட ஊதியம் வராமல் இருக்கும். ஆனால், வேலைக்கு வராத பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் உடனுக்குடன் வரவாகிவிடும். ரோட்டோரம் முறுக்கு விற்பவர், நகைக்கடை ஊழியர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் இவர்களெல்லாம் 100 நாள் வேலைக்கு வருவது போன்று வருகைப் பதிவேடுகளை தயாரித்து பணத்தை முறைகேடாக எடுப்பதாக ஆதாராத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார் ஆவேசமாக.
இந்த முறைகேடுகள் குறித்து நம்மிடம் பேசிய 100 நாள் வேலை திட்ட முறைகேடு கண்காணிப்பு அதிகாரி ஒருவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுபோன்று 30 ஊராட்சிகளில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முறைகேடாக எடுக்கப்பட்ட பணமும் ரெக்கவரி செய்யப்பட்டது. ஒருசில இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வழக்குகள் நடந்து வருகிறது. அரசியல் தலையீடுகள் இருப்பதாலேயே இதுபோன்ற முறைகேடுகளை எங்களால் முழுமையாக தடுக்க முடியவில்லை” என்றார். காந்தியின் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்திலேயே இப்படி காந்தி கணக்கு எழுதி காசைச் சுரண்டுபவர்களை என்னவென்று சொல்வது!














