உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் பக்தர்களின் புனித யாத்திரைக்கு பிறகு 1.5 டன் குப்பைகளை நகர பஞ்சாயத்து அகற்றியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அப்போது இக்கோயில்கள் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த 4 கோயில்களுக்கும் பக்தர்கள் சென்று வரும் யாத்திரை சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சார்தாம் யாத்திரை சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயிலில் கடந்த 17-ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இதன் பிறகு கோயிலின் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் விரிவான துப்புரவு இயக்கத்தை நகர பஞ்சாயத்து தொடங்கியது. இதில் 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். இவர்கள் 1.5 டன் கழிவுகளை சேகரித்து அப்பகுதிகளின் அழகை மீட்டெடுத்தனர்.
2024-ம் ஆண்டு யாத்திரை பருவத்தில் பத்ரிநாத் கோயிலுக்கு மே 12 முதல் நவம்பர் 17 வரை 14 லட்சத்து 35,441 பக்தர்களும் கேதார்நாத் கோயிலுக்கு மே 10 முதல் நவம்பர் 3 வரை 16 லட்சத்து 52,076 பக்தர்களும் வருகை தந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.














