வாராணசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற தேவ் தீபாவளி விழாவையொட்டி, கங்கை நதிக்கரையோரம் உள்ள படித்துறைகளில் 11 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில், தீபாவளி முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு, கார்த்திகை பவுர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி (தெய்வங்களின் தீபாவளி) சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, இவ்விழா நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2,100 ட்ரோன்கள் பங்கேற்ற கண்கவர் வான்வழிக் காட்சி நடைபெற்றது.
இந்த ட்ரோன்கள் மூலம் இரவு நேரத்தில் வானில் சிவபெருமான், கங்கை அம்மன் உருவங்கள் மற்றும் காசியின் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டன.
இதுதவிர, கங்கை ஆரத்தி, முப்பரிமாண ஒளிப்படக் காட்சி, லேசர் ஒளிக்காட்சி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாணவேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். உத்தர பிரதேச மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
