ஆசிய விளையாட்டு வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 73 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் புதுப்பிக்கப்பட்ட 77 பேர் கொண்ட அணியை இந்திய தடகள கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
இதில் காயம் காரணமாக விலகி உள்ள ஈட்டி எறிதல் நட்சத்திரமான நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற யஷ்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில், ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் அபிஷேக் பால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது காயமடைந்த 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தய வீரர் தேஜஸ் ஷிர்சேயும் அணியில்இருந்து நீக்கப்பட்டுள்ளார். 200 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹரிதா பத்ரா, 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை கிரண் பாஹல், போல்வால்ட் வீராங்கனை சிந்து ஜி, டிரிப்பிள் ஜம்ப் வீராங்கனை ஆஷா இளங்கோ, வட்டு எறிதல் வீராங்கனை சான்யா யாதவ் மற்றும் சங்கிலி குண்டு எறிதல் வீரர் பிரவீன் குமார் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற அவினாஷ் சேபிள் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய தடகள கூட்டமைப்பு போட்டி அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், அவருக்கு விருப்பமான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் குல்வீர் சிங், பாரூல் சவுத்ரி ஆகியோர் தலா மூன்று போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
குல்வீர் 10,000 மீட்டர், 5,000 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களிலும், பாரூல் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ், 5,000 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களிலும் போட்டியிடுகின்றனர்.
