Home விளையாட்டு செய்திகள் 3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள்

3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள்

0

இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ரசிகர்களுக்கு மிகவும் வேதனை தரும் விதமாக 3-வது முறையாக உலகக் கோப்பை நேரடித் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு மேற்கு இந்தியத் தீவுகள் நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு மேற்கு இந்தியத் தீவுகள் தள்ளப்பட்டுள்ளது. 2023 உலகக் கோப்பைக்கும் அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. இதன் மூலம் 2027 உலகக் கோப்பைக்கு அந்த அணி நேரடித் தகுதி பெற்றது. அதேவேளையில், மேற்கு இந்தியத் தீவுகள் மீண்டும் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலை உறுதியானது. உலகக் கோப்பையின் முதல் 2 தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள், தொடர்ந்து 3-வது முறையாக நேரடித் தகுதியைத் தவறவிட்டுள்ளது.

தற்போது ஒருநாள் போட்டி தரவரிசையில் மேற்கு இந்தியத் தீவுகள் 10-வது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் அணியைத் தவிர, ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் முழு உறுப்பினர் அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும். முதல் 8 இடங்களுக்குள் தென் ஆப்பிரிக்கா மட்டுமே போட்டியை நடத்தும் அணியாக உள்ளது. ஜிம்பாப்வே 11-வது இடத்தில் இருப்பதால், 9-வது இடத்தில் உள்ள வங்கதேசமும் நேரடித் தகுதி பெறும் நிலையில் உள்ளது. ஆனால் 10-வது இடத்தில் இருக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் நேரடித் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை அயர்லாந்து 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்றும், அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும் என்றும் அந்த அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் அயர்லாந்து வெற்றி பெற்றாலும் தொடரை அதிகபட்சமாக 3-1 என்ற கணக்கில்தான் கைப்பற்ற முடியும்.

இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் 2-0 என்ற கணக்கில் வென்றாலும், ஐசிசி தரவரிசையில் முதல் 9 இடங்களுக்குள் முன்னேற முடியாது. இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் கடைசியாக 2006-ம் ஆண்டில்தான் வென்றது. இந்திய மண்ணில் இருதரப்பு ஒருநாள் தொடரை வென்றது கடைசியாக 2002-ம் ஆண்டு ஆகும்.

2019 உலகக் கோப்பைக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் நேரடியாகத் தகுதி பெறவில்லை. ஆனால், தகுதிச்சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையில் இடம்பிடித்தது. 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கும் அந்த அணி நேரடித் தகுதியைத் தவறவிட்டது. ஆனால், அந்த முறை தகுதிச்சுற்றிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்குள் நுழைய முடியவில்லை.

உலகக் கோப்பையின் முதல் 2 தொடர்களான 1975 மற்றும் 1979-ல் மேற்கு இந்தியத் தீவுகள் சாம்பியன் பட்டம் வென்றது. 1983 தொடரிலும் அந்த அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘கபில்ஸ் டெவில்ஸ்’ என்று பிற்பாடு அழைக்கப்பட்ட இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

உலகக் கோப்பையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற 3 அணிகளில் மேற்கு இந்தியத் தீவுகளும் ஒன்றாக உள்ளது. இந்தியா 2 முறையும், ஆஸ்திரேலியா 6 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version