இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி கடந்த ஆண்டு டிசம்பரில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் தற்போது இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான மத்திய பிரதேசத்தை சேர்ந்த சரண்ஷ் ஜெயின், ஜம்மு&காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அகிப் நபி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது:
எங்கள் கண்முன்னே என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும், நாங்கள் எதற்காக விளையாடுகிறோம் என்பதும் எங்களுக்கு தெரியும். எங்களால் கடின உழைப்பைக் கொடுக்க முடியும், எல்லைகளை தாண்டி செயல்பட முடியும், அணியின் அனைத்துத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்யவும் முடியும்.
ஆகஸ்ட் 15-ம் தேதி காலை முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும்போது, நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, அல்லது பந்துவீச்சு செய்தாலும் சரி, எங்களிடம் வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு சவாலுக்கும் பதிலளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.
அணியில் புதிய வீரர்கள் இணைந்திருக்கிறார்கள். முதலாவதாக, சரண்ஷ் ஜெயினுக்கு வாழ்த்துகள். இங்கு வருவதற்கு அவர், கடினமாக உழைத்துள்ளார். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதை உங்கள் குடும்பத்துக்காகவும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் பயன்படுத்துங்கள்.
இரண்டாவதாக, அகிப் நபிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த சீசன் அவருக்கு அற்புதமாக அமைந்தது, ஜம்மு & காஷ்மீருக்கு ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். அவருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள். இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.
