Home விளையாட்டு செய்திகள் “வலுவாக திரும்புவோம்” – தோல்வி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் | T20 WC...

“வலுவாக திரும்புவோம்” – தோல்வி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் | T20 WC 2026

0

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்களில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.

இந்த ஆட்டத்துக்கு பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஆட்டத்தில் தொடக்கம் நன்றாக இருந்தது என நான் கருதுகிறேன். தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசினோம். 21 ரங்களுக்கு 3 விக்கெட்டை கைப்பற்றி இருந்தோம்.

ஆனால், 7 முதல் 15-வது ஓவர் வரை தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பேட் செய்திருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கிலும் அதை செய்திருக்க வேண்டும்.

180+ ரன்களை சேஸ் செய்யும் போது பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டத்தை வென்று விட முடியாது. ஆனால், இதுமாதிரியான நேரத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டத்தை இழக்க வாய்ப்புள்ளது. இதை நான் சில நேரங்களில் கருதுவது உண்டு.

பவர்பிளேவில் அதிகளவில் விக்கெட்டுகளை இழந்தோம். 180+ ரன்களை சேஸ் செய்யும் போது சிறிய அளவிலான பார்ட்னர்ஷிப் தேவை. அதுவும் எங்களுக்கு அமையவில்லை. இதிலிருந்து சில விஷயங்களை கற்றுள்ளோம். நிச்சயம் வலுவாக மீண்டும் திரும்புவோம்.

பும்ராவும், அர்ஷ்தீப் சிங்கும் இணைந்து சிறப்பாக பந்து வீசினர். இருவரும் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தினர். ஜிம்பாப்வே உடனான அடுத்த ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் விளையாட விரும்பும் வகையில் எங்களது ஆட்டம் இருக்கும். வலுவாக திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நடுவரிசையில் நம்பிக்கை அளித்தார். அவர் தென் ஆப்பிரிக்கா உடனான ஆட்டத்தில் விளையாடாதது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அடுத்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version