ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு ஜோஷ் இங்லிஷ் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அகீல் ஹோசைன் வீசிய முதல் ஓவரில் ஜோஷ் இங்லிஷ் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் விரட்டினார். முகேஷ் சவுத்ரி வீசிய அடுத்த ஓவரில் ஜோஷ் இங்லிஷ், ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸர் விளாசினார். அன்ஷுல் கம்போஜ் வீசிய 3-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாச, ஜோஷ் இங்லிஷ் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் தேர்டு மேன் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார்.
முகேஷ் சவுத்ரி வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசிய ஜோஷ் இங்லிஷ், 3 பவுண்டரிகளையும் விரட்டி மிரட்டினார். இந்த ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. மட்டையை சுழற்றிய ஜோஷ் இங்லிஷ் 17 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அகீல் ஹோசைன் வீசிய 5-வது ஓவரையும் ஜோஷ் இங்லிஷ் பதம் பார்த்தார். இந்த ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு அசத்தினார் ஜோஷ் இங்லிஷ்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 10 பந்துகளில், 10 ரன்கள் எடுத்த நிலையில் அன்ஷுல் கம்போஜ் வீசிய 6-வது ஓவரின் முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டுக்கு அருகே டெவால்ட் பிரேவிஸிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஜோடி 5.1 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து நிக்கோலஸ் பூரன் களமிறங்க எஞ்சிய பந்துகளில் ஜோஷ் இங்லிஷ் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். பவர்பிளேவில் லக்னோ அணி 91 ரன்கள் குவித்தது. நூர் அகமது வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை நிக்கோலஸ் பூரன் டீப் மிட்விக்கெட் திசையில் விளாசிய போது சர்ஃபராஸ் கானிடம் கேட்ச் ஆனது.
3 பந்துகளை சந்தித்த நிக்கோலஸ் பூரன் 1 ரன் சேர்த்தார். இதையடுத்து கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கினார். ஜோஷ் இங்லிஷின் அதிரடியால் லக்னோ அணி 7.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 10-வது ஓவரை வீசிய ஜேமி ஓவர்டன் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தை ஜோஷ் இங்லிஷ் ஸ்கூப் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் உரசியபடி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனது.
33 பந்துகளை சந்தித்த ஜோஷ் இங்லிஷ் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசினார். இதைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 12 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஓவர்டன் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 9.4 ஓவர்களில் 115 ஆக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு இணைந்த எய்டன் மார்க்ரம், அக் ஷத் ரகுவன்ஷி ஜோடி நிதானமாக விளையாடியது. எய்டன் மார்க்ரம் 7 பந்துகளில், 6 ரன்கள் எடுத்திருந்த போது டெவால்ட் பிரேவிஸின் துல்லியமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஷாபாஸ் அகமது களமிறங்கினார்.
சீராக ரன்கள் சேர்த்த அக் ஷத் ரகுவன்ஷி 18 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஓவர்டன் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற உர்வில் படேலிடம் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹிமத் சிங், ஜேமி ஓவர்டன் வீசிய 15-வது ஓவரின் 4-வது பந்தை லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். முகேஷ் சவுத்ரி வீசிய 18-வது ஓவரில் ஷாபாஸ் அகமது ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். தொடர்ந்து ஜேமி ஓவர்டன் வீசிய அடுத்த ஓவரில் ஷாபாஸ் அகமது 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். அன்ஷுல் கம்போஜ் வீசிய கடைசி ஓவரில் 4-வது பந்தில் ஹிமத் சிங் போல்டானார்.
12 பந்துகளை சந்தித்த ஹிமத் சிங் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 17 ரன்கள் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹிமத் சிங், ஷாபாஸ் அகமது ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. அடுத்த பந்தில் முகமது ஷமி (0) ரன் அவுட் ஆனார். கடைசி பந்தை ஷாபாஸ் அகமது லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ஷாபாஸ் அகமது 25 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசினார். பந்துவீச்சில் சிஎஸ்கே அணி சார்பில் ஜேமி ஓவர்டன் 3, அன்ஷுல் கம்போஜ் 2, நூர் அகமது ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்சனும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். பிரின்ஸ் யாதவ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை சஞ்சு சாம்சன் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
இதே ஓவரின் 4-வது பந்தை ருதுராஜ் கெய்க்வாட் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாசினார். முகமது ஷமி வீசிய 3-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டப்பட்டது. 3 ஓவர்களில் சிஎஸ்கே 35 ரன்களை குவித்தது. திக்வேஷ் ராதி வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கும் 3-வது பந்தை சிக்ஸருக்கும் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 4-வது பந்தில் போல்டானார். 14 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 3.4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய உர்வில் படேல் மட்டையை சுழற்றினார்.
அவேஷ் கான் வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தை ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸருக்கு விளாச இதே ஓவரின் கடைசி 3 பந்துகளை உர்வில் பேடல் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஓவரில் 25ரன்கள் விளாசப்பட்டது. திக்வேஷ் ராதி வீசிய 6-வது ஓவரையும் உர்வில் படேல் பதம் பார்த்தார். இந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசினார் உர்வில் படேல். இந்த ஓவரிலும் 25 ரன்கள் சேர்க்கப்பட்டது. பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 97 ரன்கள் குவித்தது. முகமது ஷமி வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை உர்வில் படேல் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 13 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் அரை சதம் விளாசினார். ஷாபாஸ் அகமது வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்ஸருக்கும் விளாசி மிரளச் செய்தார் உர்வில் படேல். அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 23 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசிய நிலையில் ஷாபாஸ் அகமது வீசிய பந்தை டீப் எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய போது அவேஷ் கானிடம் கேட்ச் ஆனது.
2-வது விக்கெட்டுக்கு உர்வில் படேல், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 34 பந்துகளில் 81 ரன்கள் குவித்தது. இதையடுத்து கார்த்திக் சர்மா களமிறங்கினார். 10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 131 ரன்கள் குவித்தது. சீராக ரன்கள் சேர்த்த ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஷாபாஸ் அகது பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட், கார்த்திக் சர்மா ஜோடி 21 பந்துகளில், 23 ரன்கள் சேர்த்தது.
அப்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 43 பந்துகளில் 55 ரன்கள் தேவையாக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸ் 12 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் திக்வேஷ் ராதி பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து கார்த்திக் சர்மா 20 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவேஷ் கான் பந்தில் வெளியேறினார்.
அடுத்தடுத்து சரிந்த இந்த 2 விக்கெட்களால் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி உருவானது. ஷிவம் துபே, பிரசாந்த் வீர் களத்தில் இருக்க கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவையாக இருந்தது. பிரின்ஸ் யாதவ் வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்தை பிரசாந்த் வீர், டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. அவேஷ் கான் வீசிய 19-வது ஓவரின் முதல் 2 பந்துகளிலும் பிரசாந்த் வீர் கொடுத்த கேட்ச்சை முறையே திக்வேஷ் ராதி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தவறவிட்டனர்.
இதே ஓவரின் 4-வது பந்தை பிரசாந்த் வீர் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த ஓவரை வீசிய எய்டன் மார்க்ரம் முதல் 2 பந்துகளை வைடாக வீசினார். இதையடுத்து வீசப்பட்ட அடுத்த 2 பந்துகளையும் ஷிவம் துபே சிக்ஸருக்கு விளாச சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிவம் துபே 7 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 15 ரன்களும், பிரசாந்த் வீர் 12 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 17 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் திக்வேஷ் ராதி, ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 6 வெற்றி, 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இது 8-வது தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை முதல் அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இழந்தது. அந்த அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். ஆனால் டாப் 3-ல் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளையும், குஜராத் டைட்டன்ஸ் 14 புள்ளிகளையும், பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளையும் இப்போதே குவித்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே 12 புள்ளிகளை பெற்றுள்ளன.
13 பந்தில் அரை சதம் அடித்து சாதனை
ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் உர்வில் படேல் 13 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் பகிர்ந்து கொண்டர் உர்வில் படேல். ஜெய்ஸ்வால் கடந்த 2023-ம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 13 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.
32 ஆயிரம் ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியை காண மைதானத்தில் 32,825 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
பவர்பிளேவில் அதிகம்
ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் பவர்பிளேவில் அதிக ரன்கள் விளாசப்பட்டது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இதே ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி பவர்பிளேவில் 91 ரன்கள் குவித்து இருந்தது.
தப்பித்த உர்வில் படேல்
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் உர்வில் படேல் 19 பந்துகளில் 62 ரன்கள் விளாசியிருந்த போது கொடுத்த பிரின்ஸ் யாதவ் பந்தில் பேக்வேர்டு பாயின்ட் திசையில் கொடுத்த கேட்ச்சை திக்வேஷ் ராதி தவறவிட்டார். 2019-க்கு பிறகு முதல் வெற்றி ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 204 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது. ஐபிஎல் தொடரில் 180 ரன்களுக்கு மேலான இலக்கை சிஎஸ்கே அணி 2019-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் துரத்தி வெற்றி கண்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சிஎஸ்கே அணி 180+ ரன்களை இலக்கை துரத்திய 14 ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்தது.
இன்றைய ஆட்டம்
பஞ்சாப் – டெல்லி
இடம்: தரம்சாலா
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோஹாட் ஸ்டார்
