தமிழ் தேசிய களத்தில் தவெகவும் விசிகவும் இணைந்தே இனி பயணிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான நேற்று, அக்கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. அமைச்சர் வன்னி அரசு வரவேற்றார்.
மாநாட்டுக்கு தலைமை வகித்த திருமாவளவன் தனது பேச்சின் தொடக்கத்தில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஈழவேந்தன், நடிகர்கள் சத்யராஜ், ராமராஜன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் மாநாட்டு தீர்மானங்களில் சிலவற்றை வாசித்தார்.
“சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளையே தமிழ் தேசியத்தின் அடித்தளமாகக் கொண்டு செயல்பட வேண்டும். சாதியையும், சாதியத்தை பாதுகாக்கும் மதவாதத்தையும் எதிர்த்து, அனைவருக்கும், சம உரிமை, சமூக நீதியை உறுதி செய்யும் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க இந்த மாநாடு உறுதியேற்கிறது.
தமிழர்களின் மொழி உரிமை, இன உரிமை பண்பாட்டு உரிமை மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு உண்மையான மாநில சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும். கல்வி பொருளாதாரம் நிர்வாகம், கலை இலக்கியம் பண்பாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுப்படுத்தும் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
விசிக தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி என்பதை மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம், இனி வருங்காலத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்தோம்.
125 தீர்மானங்கள்…
இதுவரையில் காங்கிரஸ், திமுக, அதிமுகவே ஆளும் கட்சியாக இருந்துள்ளன. தற்போது ஆளும் தவெகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். இனி தமிழ் தேசிய களத்தில் தவெகவும், விசிகவும் இணைந்தே பயணிக்கும். விடுதலைச் சிறுத்தைகளும் ஆளும்கட்சியாக பரிணமிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியம் சார்ந்து இந்த மாநாட்டில் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடங்க மறுத்த தொண்டர்களால் மாநாடு பாதியில் முடிந்தது
விசிக மாநாட்டுக்காக காலை 11 மணி முதலே தொண்டர்கள் உளுந்தூர்பேட்டையில் குவியத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு மாநாட்டு மேடைக்கு திருமாவளவன் வந்த போது மேடையில் இருந்து தொண்டர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ‘ரேம்ப்’ பகுதியை தொண்டர்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்தனர்.
அவர்களை கட்டுப்படுத்த நேரடியாக திருமாவளவனே கீழே இறங்கினார். தொண்டர்கள் அவரது கையையும், காலையும் பிடித்துக் கொண்டு விட மறுத்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த திருமாவளவன் அவர்களை அதட்டியும் பிடித்து தள்ளியும் அங்கிருந்து அகற்ற முயன்றார்.
கடும் நெருக்கடி ஏற்பட்டதால் பதற்றமானவர், மாநாட்டு உரையை தவிர்த்து, மாநாட்டுத் தீர்மானங்களை மட்டுமே வாசித்தார்.அப்போது கூட்ட நெரிசலில் சிலர் மயங்கி விழ, அவர்களை பவுன்சர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் மாலை 5.30 மணிக்கெல்லாம் மாநாட்டு மேடையில் இருந்து திருமாவளவன் கீழே இறங்கிச் சென்றார். அத்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகளும் முடிவுற்றன.
