உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான நேற்று 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மனை பிரஷாந்தா யானை சுமந்து ஊர்வலமாக செல்லும் ஜம்பு சவாரி கோலாகலமாக நடைபெற்றது. இதனை கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய 3 மாநில முதல்வர்கள் தொடங்கி வைத்தனர்.
416-வது ஆண்டாக தசரா விழாவை மடாதிபதி அபினவ கவிசித்தேஸ்வரா மகா சுவாமிஜி கடந்த 11-ம் தேதி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று விஜய தசமியை முன்னிட்டு நண்பகல் 1.52 மணிக்கு மைசூரு அரண்மனையில் உள்ள நந்திகொடிக்கு முதல்வர் டி.கே.சிவகுமார் மகர லக்னத்தில் சிறப்பு பூஜை செய்தார்.
ஜம்பு சவாரி
இதைத் தொடர்ந்து மாலை 4.29 மணிக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீஷன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய மூன்று முதல்வர்களும் சேர்ந்து மீன லக்னத்தில் பூஜை செய்து, ‘ஜம்பு சவாரி’ என அழைக்கப்படும் யானைகளின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். டி.கே.சிவகுமார் தனது மனைவி உஷா சிவகுமாருடன் இணைந்து சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டார்.
54 வயதான பிரஷாந்தா யானை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் சிலையை சுமந்து ராஜ வீதியில் ஊர்வலமாக சென்றது. பிரஷாந்தா யானையை பின்தொடர்ந்து ரூபா, காவேரி, கண்டா, தனஞ்செயா, மகேந்திரா, கஜன், பீமா, ஏகலைவா, லட்சுமி உள்ளிட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நடந்து சென்றன. 19 ஆண்டுகள் மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள பிரஷாந்தா யானை, இந்த ஆண்டு முதல் முறையாக தங்க அம்பாரியை சுமந்து செல்லும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
