2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கேப்டனான அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அப்போதைய நட்சத்திர ஹிட்டரான இங்கிலாந்தின்ன் ஜாஸ் பட்லரை பந்து வீசாமலேயே ‘மன்கடிங்’ ரன் அவுட் செய்து வெளியேற்றியது கடும் சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் சில அரிய பாராட்டுதல்களுக்கும் உரிய சம்பவமானது நினைவிருக்கலாம்.
இந்தச் சர்ச்சை அதன் பிறகு ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அஸ்வினைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது, அஸ்வினும் ஜாஸ் பட்லரை மன்கடிங் செய்ய வேண்டிய அவசியத்தையும் அப்படி ஒரு அவுட் முறை விதியில் இருந்தால் அதைப் பயன்படுத்துவதில் என்ன தவறு?
மேலும் முன் கூட்டியே கிரீசைத் தாண்டி ஒரு ரன்னர் முன்னேறிச் செல்வதன் பயன்களை ஒரு அணி மட்டும் அனுபவிக்கலாம், வெற்றி பெறலாம் அதைத் தடுத்தால் அது அநியாயமான ஆட்டமாகி விடுமா என்றேல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுத்து அஸ்வின் தன்னைத் தற்காத்து வந்தார்.
இந்நிலையில் ஆகாஷ் சோப்ராவுடனான சமீபத்திய யூடியூப் சேனல் உரையாடலிலும் அதனை மீண்டும் நினைவு கூர்ந்து தன் தரப்பு நியாயத்தை வலியுறுத்தினார்: “அன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி வாய்ப்பின் அருகில் இருந்தது. நான் கிங்ஸ் லெவன் கேப்டன்.
நான் அவரை மன்கடிங் முறையில் ரன் அவுட் செய்தேன், என் அணியே கடும் என் செயல் குறித்து ஏமாற்றமடைந்தது. அப்போதே தெரிந்து விட்டது அடுத்து வரும் நாட்களில் ஆளாளுக்கு இதைப் பற்றி விமர்சனங்களை எழுப்புவார்கள் என்பது. ஆனால் அதை நான் கையாள முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.
எங்கள் பணி வெற்றி பெறுவதே, அந்த மன்கடிங் அவுட்டினால் நாங்கள் வெற்றி பெற்றோம். பட்லரின் ரன் அவுட் எங்களுக்கு 2 பாயிண்ட்களை வழங்கியது என்றால் அதை நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பட்லர் கிரீசை விட்டு வெளியேறும் வரை நான் காத்திருந்து வேண்டுமென்றே அந்த ரன் அவுட்டை உருவாக்கினேன் என்று பலரும் பேசினர். ஆனால் தவறு என்னுடையதல்ல. நடுவர்கள்தான் விதிமுறையின் படி அது அவுட்டா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
சரி அப்படியே பட்லர் கிரீசை விட்டு வெளியே வரும் வரை நான் என் பவுலிங் ஆக்ஷனை தாமதப்படுத்தினேன் என்று வைத்துக் கொண்டாலும் அவருமே நான் பந்தை ரிலீஸ் செய்யும் வரை காத்திருக்கலாமே. யார் வேண்டாம் என்றது. எனவே அதுவும் என் தவறல்ல. அந்த மாதிரி அவுட் செய்வது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றால் எம்.சி.சி. அதனை பார்த்து முடிவெடுத்திருக்க வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன் அது என் தவறல்ல. எனவே நான் அது குறித்து வெட்கப்பட வேண்டும்? அந்தப் போட்டிக்குப் பிறகே நான் நல்ல இனிப்புகளை உண்டு என் வாழ்நாளின் சிறந்த உறக்கத்தைப் பெற்றேன்.” என்று அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவரது இந்தச் செய்கைக்குப் பிறகே 2022-இல், மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் (MCC) தனது புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, ‘மன்காடிங்’ முறையை, ரன்னர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யும் ஒரு சாதாரண முறையாக அது அங்கீகரித்தது. இதன் மூலம், இந்த முறை ‘விதி 41’ (நேர்மையற்ற ஆட்டம்) என்பதிலிருந்து நீக்கப்பட்டு, ‘விதி 38’ (ரன் அவுட்) பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டது.
