புதுச்சேரியில் 3-வது உலகத் திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. பார்வையாளர்கள் 10 நாடுகளைச் சேர்ந்த 10 மொழிப் படங்களை இலவசமாக பார்க்கலாம்.
புதுவை திரை இயக்கம், பிரெஞ்சு மொழி மற்றும் பண்பாட்டை உலகெங்கும் பரப்பும் அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து 3-வது உலக திரைப்பட விழாவை நடத்துகிறது.
அலையன்ஸ் பிரான்சிஸ் கருத்தரங்கு கூடத்தில் இன்று (ஆக.7) தொடங்கி 9-ம் தேதி வரை 3 நாட்கள் இந்த திரைப்பட விழா நடக்கிறது. இன்று (ஆக.7) மாலை 6 மணிக்கு இதன் தொடக்க விழா நடக்கிறது.
புதுச்சேரியில் நடைபெறும் 3-வது உலக திரைப்பட விழா நிகழ்வு விவரங்களை அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரண்ட் ஜாலிகுஸ் வெளியிட்டார். அதை புதுச்சேரி திரை இயக்க செயலர் ரவிசந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் கலைப்பிரிவு அர்னால்ட் ராண்டிக் உள்ளிட்டோர் பெற்றனர்.
திரைப்பட விழா தொடர்பாக புதுச்சேரி திரை இயக்க செயலர் ரவிசந்திரன் கூறியதாவது: தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் இன்று மாலை விழாவை அலையன்ஸ் பிரான்சிஸ் திரை அரங்கில் தொடங்கி வைக்கிறார்.
விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, கொலம்பியா, இலங்கை, இந்தியா, ஈரான், துனிசியா, தென்கொரியா, சீனா நாடுகளை சேர்ந்த 10 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு ‘தி ஸ்ட்ரேஞ்சர் (பிரெஞ்சு) படம் திரையிடப்படும். ஆக. 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘தி பீபி ஃபைல்ஸ்’ (The Bibi Files) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றிய அமெரிக்க ஆவணப்படம் வெளியிடப்படும். இதையடுத்து.
பகல் 12 மணிக்கு ‘முக்கியத் திருப்பத்தில் சுயாதீன சினிமா’ என்ற தலைப்பில்இயக்குநர்கள் ஹரிஹரன், சிவக்குமார் மோகனன், சோமீதரன் பங்கேற்கும் சிறப்பு வகுப்புகள் நடக்கும். மதியம் 2.15 மணிக்கு ‘அம்ரும்’ என்ற ஜெர்மானிய மொழித் திரைப்படம் திரையிடப்படும்.
மாலை 4.30 மணிக்கு கொலம்பியாவின் ‘ஏ பொயட்’ என்ற திரைப்படம் திரையிடப்படும், இரவு 7 மணிக்கு ‘நீலீரா’ தமிழ் திரைப்படம் திரையிடப்படும். 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு பெங்காலி திரைப்படம் ‘மேகே டாக்கா தாரா’ திரையிடப்படும்.
பகல் 12.15 மணிக்கு ஈரான் திரைப்படம் ‘டெரஸ்டரியல் வெர்சஸ்’ திரையிடப்படும். மதியம் 2. 30 மணிக்கு துனிசியா திரைப்படம் ‘தி வாய்ஸ் ஆப் கின்ட் ராஜாப்’ திரையிடப்படும், மாலை 4.30 மணிக்கு தென்கெரியா திரைப்படம் ‘பை த ஸ்ட்ரீன்’, இரவு 7.15 மணிக்கு சீன திரைப்படம் ‘தி சன் ரைசஸ் ஆன் அஸ் ஆல்’ திரையிடப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, திரைப்பட விழா நிகழ்வு விவரங்களை அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரண்ட் ஜாலிகுஸ் வெளியிட்டார். அதை புதுச்சேரி திரை இயக்க செயலர் ரவிசந்திரன், அலையன்ஸ் பிரான்சிஸ் கலைப்பிரிவு அர்னால்ட் ராண்டிக் உள்ளிட்டோர் பெற்றனர்.
