இலங்கையில் நடைபெற்று வரும் 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியைத் தோற்கடித்தது. இதையடுத்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை ஏ 366 ரன்கள் எடுத்து. இந்தியா ஏ அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்திருந்தது.இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. யாஷ் தாக்குர் 2 ரன்களுடனும், சரண்ஷ் ஜெயின் 68 ரன்களுடனும் விளையாடினர். யாஷ் தாக்குர் மேலும் ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். சரண்ஷ் ஜெயின் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து இந்திய ஏ அணியின் முதல் இன்னிங்ஸ் 543 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை ஏ அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக ஆஷண் பண்டாரா 87 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குர்னூர் பிரார் 6, சரண்ஷ் ஜெயின் 2, ஆகிப் நபி, யாஷ் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா ஏ அணி 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. சாய் சுதர்ஷன் 25, அமன் மோகடே 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 2 போட்டிகள் இந்த அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரை இந்தியா ஏ அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து குர்னூர் பிரார் 10 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
