Home மாநில செய்திகள் டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்

டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்

0

 தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரண பணிகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு, ஆண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதில் உரையுடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 19-ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும், வேளாண் பட்ஜெட்டை 20-ம் தேதி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, 22-ம் தேதி வரை பட்ஜெட்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர், துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றன. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிவடைந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு, டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பேரவை தலைவர் மு.அப்பாவு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நவம்பர் 17-ம் தேதி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு, முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் தேதியை அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version