ஆக்ராவில் தாஜ்மகால் வளாகத்தில் அகழாய்வு நடத்தக் கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் ஏஎஸ்ஐ-க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உ.பி.யின் ஆக்ராவில் உலகின் 7-வது அதிசயமாக கருதப்படும் தாஜ்மகால் உள்ளது. இது முகலாய மன்னர் ஷாஜஹானால் 1563-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது அங்கிருந்த ஒரு கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுகின்றன.
தற்போது உ.பி.யின் பகவான் ஸ்ரீ அக்ரேஷ்வர் மஹாதேவ் நாகநாதேஷ்வர் விராஜ்மான் தேஜோ மகாலயா கோயில் நிர்வாகிகள் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதில், “தேஜோ மகாலயா என்ற பெயரில் இருந்த கோயிலை இடித்துவிட்டு தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. எனவே அங்கு அகழாய்வு நடத்த அரசு ஆணையர் நியமிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசு மற்றும் அதன் கீழ் செயல்படும் இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு முன் இந்த மனு, ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமில்லை எனக் கூறி அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசியாக கடந்த மே 2022-ல் தாஜ்மகால் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதில், தாஜின் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் தாஜின் அடித் தளத்தில் அறைகள் எதுவும் இல்லை என்று கூறி இந்த வழக்கும் தள்ளுபடியானது.
இதற்கு ஆக்ராவில் ஏஎஸ்ஐ கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தொல்பொருள் ஆய்வாளரான டி.தயாளன் எனும் தமிழர் எழுதிய ‘Tajmahal and its Conservation’ என்ற நூல் ஆதாரமானது. ஆக்ரா மண்டலக் கண்காணிப்பாளராக 2003 முதல் 2007 வரை தாஜ்மகாலை நிர்வகித்த தயாளன் தனது ஆய்வில் தாஜ்மகாலின், அடித்தளத்தில் பெரிய அளவுகளிலான நிலவறை மட்டுமே அமைந்துள்ளதே தவிர அறைகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய வழக்கு குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “இந்த வழக்கில் கடந்த 2015-ல் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஆக்ரா சிவில் நீதிபதி முன்னிலையில் நிலுவையில் உள்ளது. வளாகத்திற்குள் ஒரு கோயில் இருப்பதை உறுதி செய்யுமாறு இவ்வழக்கு கோருகிறது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், தாஜ்மகாலை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கக்கோரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
