Home மாநில செய்திகள் நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை: இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டகாசம்

நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை: இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டகாசம்

0

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், 600 கிலோ மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களைப் பறித்து சென்றனர்.

நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரை அருகே நேற்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது செந்தில் என்பவருக்கு சொந்தமான படகை சுற்றி வளைத்த இலங்கை கடல் கொள்ளையர்கள், படகிலிருந்த 5 மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

பின்னர், படகில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள், அங்கிருந்த மீனவர்களை இரும்பு ராடால் தாக்கியதுடன், படகில் இருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படகு உரிமையாளர் செந்திலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, செருதூர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் மீதும் இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால், அவர்களும் அவசரமாக கரை திரும்பினர். செருதூர் மீனவர்களின் 2 படகுகளில் இருந்த சுமார் 600 கிலோ மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version