Home தேசிய செய்திகள் நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேர்...

நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு: 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேர் கைது

0

நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில் 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 18 அன்று மும்பையின் ஜுஹு பகுதியில், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராபின் கார் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்றாவது நபர் சில மீட்டர் தொலைவில் தனது மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார்.

டைகர் ஷெராஃபை நோக்கி ஏழு முறை துப்பாக்கியால் சுட்ட பிறகு, அந்த மூவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். அவர்கள் அந்த மோட்டார் சைக்கிளை அந்தேரி மேற்கு ரயில் நிலையம் அருகே விட்டுவிட்டனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப விசாரணையின் மூலம் காவல்துறையினர் அவர்கள் சென்ற வழியைக் கண்டறிந்தனர். அங்கிருந்து, ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் ஏறியவர்கள், ராஜஸ்தானின் கோட்டா நகரில் கைதாகினர்.

பணம், வெளிநாட்டில் வேலை உள்ளிட்ட வாக்குறுதிகளால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் பிஹாரின் பேகுசராய் நகரைச் சேர்ந்த ஹிருத்திக் என்கிற ரோஷன் (22), ஹரியானாவின் சோனிபத் நகரைச் சேர்ந்த ரேஹான் (18) மற்றும் பூல் சிங் (18) ஆகிய மூவரும் ஆவர்.

இம்மூவரும் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி வழியாக நேபாளத்துக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட், இந்தச் சதித்திட்டத்திற்கு காரணமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

அனில் பண்டிட் மூலமாக, டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலுக்குத் தான் பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைதாகி உள்ளனர்.

இவர்களை, டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் குணால் (21), சுமித் (19), ராதா (23) மற்றும் பபிதா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் இந்த நால்வரும் இன்று மகாராஷ்டிரா காவல்துறை சிஐடி (மும்பை) குழுவினரிடம் இடைக்காவலில் ஒப்படைக்கப்பட்டனர். டெல்லி காவல்துறையினர் இந்த நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி, கைதானவர்களில் குணால் மற்றும் சுமித் ஆகியோர், ஆயுதங்களைச் சேகரிப்பதற்காக சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு அமிர்தசரஸ் சென்றிருந்தது தெரியவந்துள்ளது.

இது, அணில் பண்டிட்டின் அறிவுறுத்தலின் பேரில், அமிர்தசரஸிலிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள், கைதான பெண்களான ராதா மற்றும் பபிதா மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு டெல்லிக்கு திரும்பிக்கொண்டிருந்த அந்த இரு பெண்களும், நேற்று இரவு புதுடெல்லி ரயில் நிலையத்தில் சிக்கினர். குணால் மற்றும் சுமித் ஆகியோர் சோனிபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வேலைக்காக அனில் பண்டிட், குணால் மற்றும் சுமித்திடம் ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை வழங்கியிருந்தார். அதில் ரூ.10,000 மற்றும் ரூ.12,000 பபிதா மற்றும் ராதா ஆகிய இரு பெண்களுக்கு வழங்கப்பட்டது. இவர்களில் ராதா என்ற பெண் குணாலின் காதலி ஆவார்.

ராதாவும் பபிதாவும் சோனிப்பத்தின் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் குணால் ராதாவைச் சந்தித்தான். குணாலின் வற்புறுத்தலின் பேரில், ராதாவும் பபிதாவும் ஆயுதங்களுடன் மும்பைக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version