Home சினிமா செய்திகள் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஆர்.பி.சவுத்ரி: நடிகர் சங்கம் புகழஞ்சலி

சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஆர்.பி.சவுத்ரி: நடிகர் சங்கம் புகழஞ்சலி

0

சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஆர்.பி.சவுத்ரி என்று தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், ”ஆர்.பி.சவுத்ரி அவர்களை இழந்தோரை தேற்றுவதற்கு முன் நாம் நம்மை தேற்றிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது.

தன்னிலை மாறாமல் மற்றவர் மனதையும் புண்படுத்தாமல் அவர் ஓசையில்லாமல் சாதனைகளை படைத்தவர். புதுப் புது கதைகள், புதுப் புது தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் என அப்போதைய சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சியவர்.

தெளிவும் திட்டமிடுதலும் செயல்படுத்ததிலும் ஒரு நேர்த்தி கண்டவர். “வீண்- விரயம்” என்கின்ற வார்த்தைகளை தன் அகராதியிலிருந்து அகற்றியவர். அவர் கறையின்றி நிறைவாக வாழ்ந்தார், குறையொன்றும் சொல்வார் இல்லை. இயற்கை அவரை திடக்காத்திரமாய் வைத்திருக்க, எதிர்பாரா விபத்து ஒன்றில் மரணித்தது கொடுமையிலும் கொடுமை.

அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர், அறிமுகப்படுத்தப்பட்டோர், வணிகம் செய்தோர், பழகியோர், பயணித்தோர் அனைவரின் சோக வெள்ளத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கலந்து கொள்கிறது” என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version