சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.
38 வயதான அஜிங்க்ய ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டி, 90 ஒருநாள் போட்டி, 20 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அவர், 2013-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். கடந்த 2023-ல் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
எனது பேட்டிங்கில் நான் எப்போதும் சரியான கணிப்பையும் நேரத்தையுமே நம்பியிருக்கிறேன். அதற்கான முக்கியத்துவத்தையும் நான் நன்கு அறிவேன். சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இதுவே சரியான தருணம் என நான் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
.வலது கை பேட்ஸ்மேனான ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் 38.46 சராசரியுடன் 5,077 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்கள், 26 அரை சதங்கள் அடங்கும். அதேவேளையில் 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35.26 சராசரியுடன் 2,962 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 3 சதங்கள், 24 அரை சதங்கள் அடங்கும். சர்வதேச டி 20-ல் 20 ஆட்டங்களில் 375 ரன்கள் எடுத்திருந்தார்.
ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாக அமைந்தது 2021-ம் ஆண்டாகும். அப்போது வழக்கமான கேப்டன் விராட் கோலி இல்லாத சூழலில் இந்திய அணியை வழிநடத்திய ரஹானே, முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிய நிலையிலும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றிக் காட்டினார்.
அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சொந்த காரணங்களுக்காக விராட் கோலி தாயகம் திரும்பினார்.
அதன்பின்னர், தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியபோதிலும், ரஹானே தலைமையிலான இந்திய அணி மன உறுதியோடு போராடித் தொடரைக் கைப்பற்றியது.
பிரிஸ்பனில் உள்ள ‘தி கப்பாவில்’ நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாற்றுச் சாதனையும் இந்தத் தொடரில்தான் நிகழ்ந்தது. இருப்பினும், இந்தத் திருப்பத்துக்கு தொடக்க புள்ளி 2-வது டெஸ்ட் போட்டிதான்.
அதில், அனைத்து முன்னணிப் பந்துவீச்சாளர்களையும் உள்ளடக்கிய வலுவான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு மன உறுதியுடன் களத்தில் நின்ற ரஹானே, இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் குவித்து அசத்தினார்.
மெல்பர்னில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுத் தொடரை 1-1 என சமன் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே பிரிஸ்பனிலும் வெற்றி கொடி நாட்டியிருந்தது.
