பெரம்பூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, முதல்வர் விஜய்யின் எம்எல்ஏ அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் குவிந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிய வியாசர்பாடி சர்மா நகர் முதல் தெருவில் எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை தொகுதி எம்எல்ஏவான முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்காக பிரத்யேக செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அலுவலகத்தில் கணினி வசதிகளுடன் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்தனர்.
‘‘கழிவுநீர் வடிகால், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே எம்எல்ஏ அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என்று பெண்கள் குற்றம் சாட்டினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தவெக நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் பேசி, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக நிர்வாகிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அப்பகுதியில் தனிநபர் குடும்ப சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால் சில அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் சட்டத்துக்கு உட்பட்டு அடிப்படை வசதிகள் விரைவாக செய்து கொடுக்கப்படும்’’ என்றனர்.
