அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் தான் நடிக்க இருப்பதை நடிகர் பார்த்திபன் உறுதி செய்துள்ளார்
நீண்ட நாட்களாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்த அஜித் குமார், அடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைந்து ‘டேர் டெவில்’ என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறார்.
பிரேவ்ஹார்ட் பேனரின் கீழ் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்துக்கான பணிகள் இன்று (நவ.2) தொடங்க இருப்பதாக முன்பு கூறப்பட்டது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாகவும் படத்தில் தான் நடிக்கும் தகவலை உறுதிப்படுத்தும் விதமாகவும் நடிகர் பார்த்திபன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அதில், ‘இன்று டேர் டெவில்’ நாள். சிறந்தவரான அஜித் குமாருடன் இணைந்து நடிப்பதிலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘டேர் டெவில்’ படத்தில் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தார்.
‘டேர் டெவில்’ படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜமும், படத்தொகுப்பை விஜய் வேலுகுட்டியும் மேற்கொள்கின்றனர்.
